No results found

    செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் நீக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி பேட்டி


    சேலம் மாவட்டம் ஆத்தூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    கேள்வி : மு.க.ஸ்டாலின் உங்களை பா.ஜ.க. அடிமை என்கிறாரே? பதில்: பா.ஜ.க. கட்சியோடு, தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதோடு மத்திய அமைச்சரவையில் தி.மு.க. எம்.பிக்கள் இடம் பெற்றார்கள். ஒவ்வொரு நாளுக்கும், காலத்திற்கு ஏற்றவாறு தங்களது நிலைப்பாட்டை மாற்றக்கூடிய ஒரே கட்சி தி.மு.க. தான். கூட்டணி என்பது எல்லா கட்சிகளுமே அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு செயல்படுகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் தான் செயல்படும்.

    அதுபோல் தான் அ.தி.மு.க.விற்கு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையுடன் தான் நாங்கள் கூட்டணி அமைத்து இருக்கிறோம். நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. ஆனால் தி.மு.க தான் அடிமையாக இருக்கிறது. எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் பேசுகிறார் நாங்கள் எமர்ஜென்சியின்போது மிசாவை பார்த்தோம் என்கிறார். அப்போது யாருடைய ஆட்சி. காங்கிரசுடைய ஆட்சி. அந்த ஆட்சியின்போது தான் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது. அப்படி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சிக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப்பட்டு தி.மு.க, காங்கிரஸ்சுக்கு அடிமையாக இருக்கின்றது. கேள்வி: வருகிற பாராளுமன்றத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க வெற்றி வாய்ப்பு பற்றி?

    பதில் : அ.தி.மு.க. பொறுத்தவரை வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 இடங்கள், புதுச்சேரியில் ஒரு இடம் உள்பட 40 இடங்களில் வெற்றி பெற பாடுபடுகிறோம். நாங்கள் வெற்றி பெறும் சூழல் பிரகாசமாக உள்ளது. கே: செந்தில் பாலாஜி விஷயத்தில் மு.க.ஸ்டாலின், தனது நிலைபாடு மாற்றுவாறா? ப: ஊழல் புரிந்த ஒரு அமைச்சரை தொடர்ந்து அமைச்சராக வைத்திருக்கிறார். கடந்த காலங்களில் ஆலடி அருணா ஒரு வழக்கில் சிக்கியதை அடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இப்படி தமிழகத்திற்கு என்று ஒரு அரசியல் நாகரீகம் இருக்கிறது. அதை கடைபிடிக்க வேண்டும்.

    ஒரு கைது செய்யப்பட்ட அமைச்சர் சிறை கைதியாக இருக்கிறார். அவர் அமைச்சராக இருந்தால் எப்படி சரியாக இருக்கும். மக்கள் எப்படி அரசியல்வாதிகளை மதிப்பார்கள். உண்மையில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கருதி, அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜிைய விடுவிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கே: நடிகர் விஜயின் அரசியல் கருத்து பற்றி? ப: எல்லாருக்கும் கருத்து சொல்வதற்கு உரிமை உண்டு. இது ஜனநாயக நாடு. அதன்படி அவருடைய கருத்தை அவர் தெரிவித்து இருக்கின்றார். இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    Previous Next

    نموذج الاتصال